Thursday, November 27, 2008

மாணவர் ஒருவர் என்னை வந்து சந்தித்தார்.
''சுவாமி... சின்ன வயது முதலே டாக்டராக வேண்டும் என்பது என் கனவு. ஆனால், ப்ளஸ்டூவில் நான் எடுத்திருக்கும் மார்க்கும் என்ட்ரன்ஸ் டெஸ்ட்டில் கிடைத்த மார்க்கும் என் டாக்டர் கனவில் மண்ணை அள்ளிப் போட்டுவிடும் போலிருக்கிறது. இத்தனை வருடம் நான் ராப்பகலாக உழைத்த அத்தனை உழைப்பும் ஒரே நாளில் வீணாகிவிடும் போல இருக்கிறது. பேசாமல் தற்கொலை செய்து கொள்ளலாமா என்றுகூடத் தோன்றுகிறது!'' என்று சொல்லி அடக்க முடியாமல் விம்மி அழுதார் அந்த மாணவர்.
அப்போது அவருக்குக் கூறிய இந்தக் கதையை உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
அது ஒரு அடர்ந்த காடு. அந்தக் காட்டில் அடுத்தடுத்து மூன்று மரங்கள் வளர்ந்திருந்தன. அவை ஒரு நாள் தங்களின் அபிலாஷைகளை மனம்விட்டுப் பகிர்ந்து கொண்டன.
முதல் மரம் சொல்லியது... ''தங்கம், வைரம் போன்ற செல்வங்களைப் பாதுகாக்கும் நகைப்பெட்டியாக நான் ஆகவேண்டும்!''
''அதிகாரம் நிறைந்த மாமன்னனைச் சுமந்து செல்லும் கப்பலாக ஆக வேண்டும் என்பது தான் என் லட்சியம்'' என்றது இரண்டாவது மரம்.
''நான் விண்ணிலே இருக்கும் ஆண்டவனைத் தொடும் அளவுக்கு உயரமாக வளர வேண்டும். ஆண்டவன் என் மீது இளைப்பாற வேண்டும். அதுதான் என் லட்சியம்!'' என்றது மூன்றாவது மரம்.
இப்படி மரங்கள் பேசிக் கொண்டிருந்தபோது அந்தக் காட்டுக்கு மூன்று விறகுவெட்டிகள் வந்தார்கள். பணப்பெட்டியாக வேண்டும் என்று நினைத்த மரத்தைக் காட்டி, ''இது மிகவும் உறுதியாக இருக்கிறது. இதை வெட்டி நகைப்பெட்டி செய்தால் நல்ல விலைக்குப் போகும்'' என்று அந்த மரத்தை வெட்டி எடுத்துக் கொண்டு போனான் முதல் விறகு வெட்டி. தன் லட்சியம் நிறைவேறப்போவதை நினைத்து அந்த மரம் சந்தோஷித்தது.
கப்பலாக ஆசைப்பட்ட மரத்தைப் பார்த்த அடுத்த விறகு வெட்டி... ''இந்த மரம் வளைவுகள் ஏதும் இல்லாமல் நேராக இருக்கிறது. அதனால் இதை கப்பல் கட்டும் தச்சர்களிடம் நான் விற்றுவிடப் போகிறேன்'' என்று அந்த மரத்தை வெட்டி எடுத்துக்கொண்டு போனான். கப்பலாகப்போகும் கனவில் அந்த மரம் மிதந்தது.
மூன்றாவது விறகு வெட்டி, விண்ணைத் தொடும் அளவுக்கு உயரமாக வளரப் போவதாக ஆசைப்பட்ட மரத்தை வெட்டியதுமே அதன் ஆசை நிராசையாகி விட, அது சோகத்தில் ஆழ்ந்தது.
சில நாட்கள் ஆயின. பணப்பெட்டி செய்யப் போகிறேன் என்று மரத்தை வெட்டிக் கொண்டு போனவன் மனதை மாற்றிக் கொண்டான். பணப்பெட்டிக்குப் பதிலாக அந்த மரத்தை கொண்டு அவன் மாடுகளுக்குத் தீவனம் வைக்கும் பெட்டியைச் செய்தான். சாணத்துக்கும் கோமியத்துக்கும் மத்தியில் வந்து சேர்ந்த அந்த மரம் தன் கனவு சிதைந்து போனதை எண்ணிக் கலங்கியது.
அடுத்து கப்பல் செய்யப்போகிறேன் என்று புறப்பட்ட விறகுவெட்டி அந்த மரத்தை சாதாரணப் படகு செய்கிறவனிடம் தர, அது சின்னப் படகாக உருவெடுத்தது. மன்னனைச் சுமக்கும் ஆசை மண்ணாகிப் போனது குறித்து அந்த மரம் மனம் வெதும்பியது.
இறைவனின் திருவடிகளைத் தொட நினைத்த மரம் எந்த உபயோகமுமின்றி ஏதோ ஒரு இருட்டறையில் துயரத்துடன் வீழ்ந்து கிடந்தது.
ஒரு நாள் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி பிரசவத்துக்காகத் தன் கணவனுடன் வைத்தியர் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். வழியிலேயே அவளுக்குப் பிரசவ வலி ஏற்பட, அங்கே இருந்த மாட்டுக் கொட்டகையில் அவர்கள் தஞ்சம் புகுந்தார்கள். அங்கேயே அவள் ஒரு அழகான குழந்தையைப் பெற்றெடுத்தாள். கணவன், அவசரத்துக்கு அங்கே இருந்த தீவனப் பெட்டியில் வைக்கோலைப் பரப்பி அதில் குழந்தையைப் படுக்க வைத்தான். விலையுயர்ந்த செல்வங்களைப் பாதுகாக்கும் நகைப் பெட்டியாக உருவெடுக்க நினைத்த மரத்துக்கு அதைவிட மதிப்பு வாய்ந்த ஒரு உயிரைப் பாதுகாக்கும் வேலை கிடைத்ததும் தான் கேட்டதை விடவே ஆண்டவன் அதிகமாகக் கொடுத்திருக்கிறான் என்று உச்சிகுளிர்ந்து போனது.
படகாகிப் போன மரம் ஒரு நாள் கடலில் பயணம் செய்யும் போது புயல் உண்டாகியது. சுழன்றடிக்கும் சூறாவளிக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் அதில் பயணித்துக் கொண்டிருந்த ஒவ்வொருவரும் பதறிக்கொண்டிருக்க, வயதான துறவி ஒருவர் அவர்களை அமைதிப்படுத்திவிட்டு, தன் கையை உயர்த்தி 'நிறுத்து' கட்டளையிட்டார். என்ன அதிசயம்! புயல் சட்டென்று நின்றது. பரவசமடைந்த பயணிகள், அந்தத் துறவியின் காலில் விழுந்து வணங்க.. மாமன்னனைவிட ஒரு பெரிய மகானைச் சுமந்த சந்தோஷத்தில் அந்த மரம் மகிழ்ச்சி அடைந்தது.
இருட்டறையில் முடங்கிக் கிடந்த மூன்றாவது மரம் ஒரு நாள் வெளியே கொண்டுவரப்பட்டது. கண்களில் அருள் பொங்கும் தோற்றமுடைய ஒருவர் அதைத் தூக்கிக் கொண்டு வீதிகளில் தள்ளாடித் தள்ளாடி நடந்து போனார். அவரைச் சிலர் சவுக்கால் அடித்து அடித்து ஒரு மலையின் உச்சிக்கு நடத்திச் சென்றார்கள். அங்கே, அந்த மரத்திலேயே அவரை ஆணிவைத்து அறைந்தார்கள்.
அவர்தான் தேவகுமாரனான இயேசு கிறிஸ்து! இந்த உண்மை தெரிய வந்ததும், தன் ஆசையை இறைவன் பூர்த்திசெய்து விட்டதை அறிந்து அந்த மரம் மகிழ்ச்சியில் விம்மியது.
ஆக, மூன்று மரங்களும் தாங்கள் என்னவாக வேண்டும் என்று ஆசைப்பட்டனவோ அவ்விதமே ஆயின. ஆனால், அவை விரும்பிய வழியில் அல்ல; கடவுள் தேர்ந்தெடுத்த வழியில்.
மரங்களுக்குப் பொருந்தும் இந்த உண்மை மனிதர்களுக்கும் பொருந்தும். கடவுள் நம் நல்ல நோக்கங்களை நிச்சயம் பூர்த்தி செய்வார்; ஆசைகளை அல்ல!

No comments: