Thursday, November 27, 2008

ஆசிரியர் என்பவரும் சூரியன் மாதிரிதான்

சென்ற வாரம் சென்னை வந்திருந்தேன். கல்லூரி மாணவர்கள் பலரைச் சந்தித்தேன். உற்சாகமாக என்னிடம் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் என்னிடம் பேசினார். ''சுவாமி, நான் நான்காம் ஆண்டு பொறியியல் படிக்கிறேன். என்னுடன் பயிலும் அத்தனை பேருக்கும் கேம்பஸ் இன்டர்வியூவிலேயே வேலை கிடைத்துவிட்டது. இத்தனைக்கும் என் வகுப்பில் படிக்கும் பலரைவிட நான் அதிக மதிப்பெண் எடுத்திருக்கிறேன். ஆனாலும் வேலை கிடைக்கவில்லை'' என்றார்.
நம் நாட்டின் ஜனாதிபதியாகவிருக்கும் விæஞான மேதை அப்துல் கலாம் பற்றி அந்த மாணவருக்குச் சொன் னேன்.
டாக்டர் அப்துல் கலாம் இயற்கையின் ரசிகர்.
பெங்களூரில் பூக்களுக்கும் மரங்களுக்கும் பஞ்சமே இல்லை என்பதால், அங்கே செட்டிலாக வேண்டும் என்ற எண்ணத்தில் புகழ்பெற்ற கல்விநிறு வனமொன்றில் சேர்ந்து பணியாற்ற ஆவலோடு இருந்தார் அப்துல் கலாம். ஆனால், அந்த
நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் சிலர், அப்துல் கலாம் முறையாக பிஹெச்.டி. படிக்காதவர் என்று காரணம் சொல்லி அவருக்குத் தங்கள் நிறுவனத்தின் கதவுகளை மூடிவிட்டனர்.
இந்தச் சம்பவம் நடந்தபோது அப்துல் கலாமின் வயது 70. அதுவும் அக்னி ஏவுகணை வெற்றிக்குப் பிறகு! பொக்ரான் வெற்றிக்குப் பிறகு! பிரதமரின் பிரதான அறிவியல் ஆலோசகராகப் பணியாற்றியதற்குப் பிறகு!
இந்நிலையில் இந்தச் சம்பவம் அப்துல் கலாமைப் பாதித்து இருக்குமா? நிச்சயம் பாதித்திருக்காது. தன்னுடைய ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்ள அவர்களுக்குக் கொடுத்துவைக்கவில்லை என்றுதான் நினைத்திருப்பார். எடுத்துக் கொண்ட குறிக்கோளுக் காகவும் லட்சியத்துக்காகவும் ஒருமுகச் சிந்தனையோடு செயல்பட்டால் இது மாதிரியான சின்ன சின்னத் தோல்விகள் நம்மை ஒருபோதும் பாதிக்காது.
என்றாலும் அந்த மாணவர் விடவில்லை. 'என்னைவிடக் குறைவாக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு எல்லாம் உடனடியாக வேலை கிடைத்திருக்கிறது. ஆனால், எனக்குக் கிடைக்கவில்லை என்று நினைக்கும்போது என்னால் ஜீரணித்துக் கொள்ளமுடியவில்லையே சுவாமி!' என்றார் மீண்டும் ஆதங்கத்தோடு!
நான் சொன்னேன்: ''ஒருவரை வேலைக்கு எடுக்கும்போது மதிப்பெண் மட்டுமே அளவுகோல் என்று யார் சொன்னது? இரண்டு வருடங்களுக்கு முன்பு கம்ப்யூட்டர் கோடிங் எழுதத் தெரிந்திருந்தால் போதும், அமெரிக்காவில் உடனடியாக வேலை கிடைக்கும். ஆனால், இப்போதோ கோடிங் மட்டும் எழுதத் தெரிந்தால் போதாது... டீமில் இருக்கும் மற்ற ஊழியர்களிடம் ஒருங்கிணைந்து வேலைசெய்யத் தெரிந்திருக்க வேண்டும். கஸ்டமர்களின் தேவை என்ன என்பதை அவர்களுடன் நட்போடு பழகிப் புரிந்துகொள்ளத் தெரிந்திருக்க வேண்டும்.. தான் உருவாக்கிய ப்ரோகிராமை விற்பனை செய்யும் சாமர்த்தியம் வேண்டும்.''
அடுத்ததாக இன்னொரு மாணவர் கேட்டார்: ''வகுப்பில் ஆசிரியர் பாடம் எடுக்கும் போதும் சரி, புத்தகத்தைப் படிக்கும்போதும் சரி... எனக்குச் சற்று நிதானமாகத்தான் விஷயங்கள் தெளிவாகின்றன. இந்தக் குறையைப் போக்கிக் கொள்வது எப்படி?''
''உங்கள் காதலியைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் அதற்காக நீங்கள் எத்தனை மெனக்கெடுவீர்கள்? எத்தனை நாள் அந்தப் பெண்ணின் பின்னாலேயே போவீர்கள்? அப்போதெல்லாம் எவ்வளவு ஈடுபாட்டுடன் முழு மனதோடு முயற்சி எடுப்பீர்களோ, அதே உற்சா கத்துடனும் முனைப்புடனும் பாடத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் குறை மாயமாய் மறைந்து போகும்'' என்றேன்.
பிறகு ஒரு புராணக் கதையையும் சொன்னேன் -
துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமன். ஆனாலும் தன்னைப் பிரதான சீடனாக ஏற்காமல் அர்ஜுனனை ஏற்றுக்கொண்டாரே என்று தன் தந்தை மீது அஸ்வத்தாமனுக்கு வருத்தம். இதை நேரடியாகத் தந்தையிடம் சொல்லியும் விட்டான். அதற்கு துரோணாச்சாரியார் சொன்னார்...
'மகனே... நான் அர்ஜுனனுக்குச் சொல்லிக் கொடுத்ததைவிட உனக்குத்தான் அதிகமாகச் சொல்லிக் கொடுத்தேன். நாராயண அஸ்திரம் பற்றி அர்ஜுனனுக்கு நான் சொல்லித்தரவில்லை. அதை உனக்குக் கற்றுக் கொடுத்தேன். மகன் என்ற காரணத்தினால் மற்றவர்களைவிட உனக்குத்தான் அதிக முக்கியத்துவம் தந்தேன். இந்தச் சுயநலம் என் மனதில் புகுந்ததனால்தான் ரிஷி என்கிற அந்தஸ்தை என்னால் அடைய முடியாமல் போய்விட்டது. உண்மை இப்படியிருக்க, என்னைப் பார்த்து இப்படியரு கேள்வி கேட்கலாமா?'
'என்னைவிட அர்ஜுனனுக்கு நீங்கள் அதிகமாகச் சொல்லித் தரவில்லை என்பது உண்மையானால், அவன் என்னைவிடத் திறமைசாலியாக இருப்பது எப்படி?' என்று கேட்டான் அஸ்வத்தாமன்.
'நான் என்னவோ உங்கள் அனைவருக்குமே ஒரே மாதிரிதான் வித்தைகளைச் சொல்லிக்கொடுத்தேன். ஆனால், அவனோ உங்களைவிட அதிகமாகக் கற்றுக் கொண்டான். சொல்லப் போனால், உங்களுக்குப் பாடம் எடுப்பதை மறைந்திருந்து கவனித்த ஏகலைவன் உங்கள் அனைவரை விடவும், அர்ஜுனனை விடவும், ஏன்... என்னை விடவே அதிகமாக என்னிடமிருந்து கற்றுக்கொண்டான்' என்றார் துரோணாச்சாரியார்.
சூரிய உதயத்தை அபாரமாக வர்ணித்து எழுதியிருக்கிறார் சுப்பிரமணிய பாரதியார். வேறு சிலரோ 'எப்படி சுள்ளுனு அடிக்குது பாரு' என்று எரிச்சலோடு ஜன்னலை இழுத்துமூடிவிட்டு நிம்மதியாகப் படுத்துத் தூங்குகிறார்கள். அதனால்தான் அவர் மகாகவி பட்டம் பெற்றார். மற்றவர்கள் சோம்பேறிப் பட்டம் பெற்றார்கள். ஆசிரியர் என்பவரும் சூரியன் மாதிரிதான். பாரபட்சம் இல்லாதவர்.

No comments: